Monday, March 24, 2025

இருபத்தி ஐந்தாவது தராவீஹ்

 بسم الله الرحمن الرحيم  

25- வது தராவீஹ்

எழுத்தும் வாசிப்பும்

ن وَالْقَلَمِ وَمَا يَسْطُرُونَ (1)

எழுதுகோலின் மீது சத்தியமாக

திருமறையில் எழுதுகோலின் முக்கியத்துவம்

  மனிதன் கல்வியறிவு பெற்றிட மிக அவசியமான இரு விஷயங்களான வாசித்தல், எழுதுதல் இரண்டிற்கும் திருக்குர்ஆன் எத்துணை முக்கியத் துவம் வழங்கியுள்ளது என்று நாம் காண்போம். எல்லாம் வல்ல அல்லாஹ் தனது திருமறையில் சூரத்துல் அலக் உடைய மூன்றாம் நான்காம் வசனங்களில் “(நபியே!) நீர் ஓதுவீராக! உமது இறைவன் தான் எழுதுகோலைக் கொண்டு (எழுதக்) கற்பித்தான்” என்று கூறுகிறான். நமது தமிழ் இலக்கியத்திலும் எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் என்று கூறப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். இதன் சரியான பொருள் மனிதனுக்கு முதன் முதலாக எழுத்தறிவை அளித்தவன் இறைவனே.

عَنْ أَبِي هُرَيْرَة سَمِعْت رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ يَقُول " إِنَّ أَوَّل شَيْء خَلَقَهُ اللَّه الْقَلَم ثُمَّ خَلَقَ النُّون وَهِيَ الدَّوَاة ثُمَّ قَالَ لَهُ اُكْتُبْ قَالَ وَمَا أَكْتُب ؟ قَالَ اُكْتُبْ مَا يَكُون - أَوْ - مَا هُوَ كَانَ مِنْ عَمَل أَوْ رِزْق أَوْ أَثَر أَوْ أَجَل فَكَتَبَ ذَلِكَ إِلَى يَوْم الْقِيَامَة فَذَلِكَ قَوْله " ن وَالْقَلَم وَمَا يَسْطُرُونَ "(تفسير ابن كثير

عَنْ أَبِي هُرَيْرَة سَمِعْت رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ يَقُول " إِنَّ أَوَّل شَيْء خَلَقَهُ اللَّه الْقَلَم ثُمَّ خَلَقَ النُّون وَهِيَ الدَّوَاة ثُمَّ قَالَ لَهُ اُكْتُبْ قَالَ وَمَا أَكْتُب ؟ قَالَ اُكْتُبْ مَا يَكُون - أَوْ - مَا هُوَ كَانَ مِنْ عَمَل أَوْ رِزْق أَوْ أَثَر أَوْ أَجَل فَكَتَبَ ذَلِكَ إِلَى يَوْم الْقِيَامَة فَذَلِكَ قَوْله " ن وَالْقَلَم وَمَا يَسْطُرُونَ " ثُمَّ خَتَمَ عَلَى الْقَلَم فَلَمْ يَتَكَلَّم إِلَى يَوْم الْقِيَامَة (تفسير ابن كثير

இறைவனால் படைக்கப்பட்ட பொருள்களிலேயே எழுதுகோல்தான் முதலாவது படைப்பு என்று நபிமொழி ஒன்று கூறுகின்றது. 

ஹழ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்: அல்லாஹ் முதன் முதலாகப் படைத்தது எழுதுகோலைத்தான். பிறகு அல்லாஹ் நூனைப் படைத்தான். நூன் என்பது மையைக் குறிக்கும். இதனைத் தான் அல்லாஹ் சூரத்துல் கலமில் “நூனின் மீது சத்தியமாக - அதாவது மையின் மீது ஆணையாக! என்று கூறுகிறான். பிறகு (எழுதுகோலை நோக்கி) “எழுது” என்பதாக ஆணையிட்டான். “எதை நான் எழுதுவது?” என்று எழுதுகோல் கேட்டது. 

   அல்லாஹ் “இதுவரை உண்டாகியுள்ள மற்றும் நிகழ்ந்துள்ள, இனி மறுமைநாள் வரை உண்டாகவிருக்கின்ற, நிகழவிருக்கின்ற செயல்பாடுகள், தவணைகள், வாழ்வாதாரங்கள் அனைத்தையும் எழுது“ என்று கட்டளையிட்டான். (மற்றோர் அறிவிப்பின்படி விதிகள் அனைத்தையும் எழுது என்று கட்டளையிட்டான்.) அதுவும் எழுதிக் கொண்டே செல்ல ஒரு கட்டத்தில் அல்லாஹ் எழுதுவதை நிறுத்தச் சொல்லிக் கட்டளையிட்டு விட்டான். பிறகு எழுதுகோலைக்கொண்டு மனிதனுக்கு எழுதக் கற்றுக்கொடுத்தான்.இதைத் தான் சூரத்துல்அலக்கில் அல்லாஹ், “எழுதுகோலைக்கொண்டு கற்பித்தானே அத்தகைய உமது இறைவன் கண்ணியத்திற்குரியவன்” என்று குறிப்பிடுகின்றான். அந்த எழுது கோலைக் கொண்டுதான் மனிதனுக்கு எழுதவும் கற்றுக்கொடுத்தான். மனித வாழ்வுக்குத் தேவையானவற்றையும் மனிதனுக்குக் கற்றுக் கொடுத்தான். (முஸ்னத் அஹ்மதிலும் இன்னும் பல்வேறு ஹதீஸ் தொகுப்புகளிலும் பதிவாகியுள்ள ஒரு ஹதீஸின் சுருக்கமான கருத்து) கல்வி கற்பதற்கான ஆதார அடிப்படையாக ஓதுவதை, வாசிப்பதை அல்லாஹ் சூரத்துல் அலக்கில் குறிப்பிடுவதைப் போலவே சூரத்துல் கலமில் “மையின்” மீதும் எழுதுகோலின் மீதும் சத்தியமிட்டு எழுது கோலின் சிறப்பை நமக்கு உணர்த்துகின்றான்.

إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ (9)

  சங்கைமிகு திருக்குர்ஆன் எழுத்துவடிவில் பாதுகாக்கப்பட்டிருப்பதால் தான் ஹாஃபிழ் அல்லாதவர்கள் திருக்குர்ஆனை ஓதுவதும் திருக்குர்ஆனுக்கு “குதுபுத் தப்சீர்” என்னும் விரிவுரை நூல்களை எழுதுவதும் அதை மொழிமாற்றம் செய்வதும் அவற்றின் மூலம் தெளிவுரை வழங்குவதும் இன்று சாத்தியமாகியுள்ளன. எழுத்துக்கலை என்று ஒன்று இருப்பதால்தான் இப்போதும் இவையெல்லாம் நமக்குச் சாத்தியமாகின்றன. நபி(ஸல்) அவர்களின் சுன்னத்தும் ஹதீஸ் என்னும் நபிமொழிக் கலையும் இன்றளவும் கூடப் பாதுகாக்கப்பட்டிருப்பதும் இந்த எழுத்துக் கலையின், எழுதுகோலின் வாயிலாகத்தான்.

திருக்குர்ஆன் அழிந்து விடாமல் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு இன்றும் நேர்வழிக்கான மூல ஊற்றாகத் தொடர்ந்து விளங்கி வருகின்றது என்றால் அதற்கு எழுதுகோல் ஆற்றிவரும் பங்கு மகத்தானது. திருக்குர்ஆன் இறங்கிய இருபத்துமூன்று வருட காலத்தில் பல்வேறு கட்டங்களில் நபி(ஸல்) அவர்கள் நாற்பதுக்கும் மேற்பட்ட எழுத்தர்களை நியமித்து தோல்களிலும் எலும்புகளிலும் அன்றைய காலத்தில் எழுதப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்திலும் இறைவசனங்களைப் பதிவுசெய்து பாதுகாத்து வைத்தார்கள். 

முதன்முதலில் எழுதுகோலைப் பயன்படுத்தும் முறையை கண்டுபிடித்த இத்ரீஸ் (அலை)

  முதன்முதலில் எழுதுகோலைப் பயன்படுத்தும் முறையை கண்டுபிடித்தது இத்ரீஸ் (அலை) அவர்கள் தான். மேலும் உலகத்திலேயே அற்புதமான கைத்தொழிலான தையலை கண்டுபிடித்தவர்களும் இவர்கள் தான். அழகிய முறையில் ஆடையை உடுத்தும் முறையை இவர்கள்தான் கற்றுத் தந்தார்கள். போர்களில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களையும் இவர்கள்தான் முதலில் கொண்டு வந்தார்கள். அதுமட்டுமின்றி அல்லாஹ்வின் பாதையில் முதலில் போர் செய்தவர்களும் இவர்கள் தான். இதுபோன்று பல நபிமார்கள் நிறைய கண்டுபிடித்துள்ளார்கள். அதில் இவருக்கு முக்கியப் பங்குண்டு.

عن عبادة بن الصامت ـ رضي الله عنه: أن رسول صلى الله عليه وسلم قال: إن أول ما خلق الله القلم. قال له: اكتب، فقال: يا رب وما أكتب؟ قال: اكتب مقادير كل شيء حتى تقوم الساعة  : رواه الترمذي ، و الطبراني، و أبو داوود ، ومسند احمد .

     உபாதத் பின் ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக அல்லாஹ் முதன் முதலில் படைத்தது பேனாவை தான். அந்தப் பேனாவிடம், "நீ எழுது!" எனக் கூறினான். அந்தப் பேனா, "என்னைப் படைத்தாள்பவனே! நான் எதை எழுதுவது?" என கேட்டது. அதற்கு அல்லாஹ் கூறினான்; "மறுமை நாள் ஏற்படுகிற வரை உள்ள அனைத்து வஸ்துக்களின் கதுர் - தலையெழுத்தையும் நீ எழுது! (பின்னர் அது எழுதி முடித்தது. ) 

நூல் : திர்மிதீ, அபூதாவூத், முஸ்னது அஹமத், தப்ரானீ.

வாசிக்கும் பழக்கம்

    சிறந்து விளங்கிய விஞ்ஞானிகள், அறிவியலாளர்கள், தலைவர்கள் போன்ற அனைவரும் நல்ல நூல்களை வாசித்ததால் தான் நம்மை திரும்பிப் பார்க்கவும்  அவர்களைப் பற்றி யோசிக்கவும் வைத்திருக்கிறார்கள்.அண்ணல் அம்பேத்கர் அவர்கள் காலையில் நூலகம் திறந்ததும் முதல் ஆளாக உள்ளே செல்வார்.நூலக நேரம் முடிந்தது கூட தெரியாமல் தன் வாசிப்பில் மெய்மறந்து வாசித்துக் கொண்டிருப்பார். இவ்வளவு வாசித்த ஒருவரால் தான் சிறந்த அரசியலமைப்புச் சாசனத்தை வழங்க முடிந்தது.

 பத்ரு யுத்தம் முடிவுற்ற பிறகு நபி (ஸல்) அவர்கள், "பிணைத்தொகை வழங்க முடியாத ஒவ்வொருவரும் 10 முஸ்லிம்களுக்கு எழுத, வாசிக்கக் கற்றுக் கொடுத்துவிட்டு செல்லலாம்" என அறிவுறுத்தினார்கள். 

   அன்றைய தினத்தில் கல்வித் தேவையை விட நபி (ஸல்) அவர்களுக்கும், இஸ்லாமிய அரசாங்கத்திற்கும் பணத் தேவையும், குரைஷியருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து அந்தக் கைதிகளை தம் வசம் வைத்திருப்பதுமே அவசியத் தேவையாக இருந்தது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் இந்த இரண்டு தேவையை விட, கல்வித் தேவை தான் அத்தியாவசியமானது என்பதை உணர்ந்து அதையே தேர்ந்தெடுத்தார்கள்.

 ஜைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் சிரியாக் மற்றும் ஹிப்ரு மொழிகளை தம் 13 ஆம் வயதிலேயே கற்றுக்கொண்டார்கள், நபி (ஸல்) அவர்கள் ஏதேனும் கடிதங்கள் எழுதுவதாக இருந்தால் இவர்களை அழைத்து தான் எழுதச் சொல்லுவார்கள். அதைப்போல் நபிகளாருக்கு வரும் கடிதங்களை வாசிப்பதற்கும்  இவர்களே நியமிக்கப்பட்டு இருந்தார்கள். அதனால் நபி (ஸல்)அவர்களோடு நெருங்கிப்பழகும் வாய்ப்பு அவர்களுக்கு உண்டானது. நபிகளாரோடு நெருங்குவதற்கு காரணம் வாசிக்கத் தெரிந்ததுதான்!

    உலகில் முதல்முறையாக கல்விப் புரட்சியை ஏற்படுத்திய இஸ்லாமிய மார்க்கத்தில் இன்று உலக அளவில் படித்தவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகக் காணப்படுகிறது. 

 ஈரோடு தமிழன்பன் கூறுவார். பத்து பறவைகளோடு பழகி பாருங்கள்; நீங்கள் ஒரு பறவையாகி விட முடியாது. பத்து நதிகளோடு பழகிப் பாருங்கள்; நீங்கள் ஒரு நதியாகி விட முடியாது. பத்து புத்தகங்களோடு பழகிப் பாருங்கள்; நீங்கள் பதினோறாவது புத்தகம் ஆவீர்கள்! 

வாசி - படி - ஓது :

    நம்மில் பெரும்பான்மையானவர்கள் வாசி - படி -  ஓது என்ற மூன்று சொற்களையும் ஒரே அர்த்தத்துடன் பார்க்கிறார்கள். ஆனால் இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு பொருள் உடையவைகளாகும்.

  வாசி:- கண்களால் பார்த்து, நாவினால் மொழிந்து சொற்களின் அர்த்தத்தை உணர்தல்.

  படி:- கண்களால் பார்த்து, நாவினால் மொழிந்து, சொற்களின்  பொருளை விளங்கி மனதால் கிரகித்தல்.

  ஓது:- கண்களால் பார்த்து, நாவினால் மொழிந்து, சொற்களின் அர்த்தத்தை விளங்கி, மனதால் கிரகித்து செயலாக  உருவமைப்பது, அல்லது நடைமுறைப்படுத்துவது.

சிந்து நதியில் சிக்கிய நூல்கள் :

    ஈரான் நாட்டிலிருந்து நம் நாட்டிற்கு வந்த குலிஸ்தான், போஸ்தான் போன்ற தத்துவ நூல்களை எழுதிய அல்லாமா ஸஅதீ சிராஜி (ரஹ் ) அவர்கள் நமது நாட்டிற்கு வந்தது போலவே உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்திருக்கிறார்கள்.

ஆங்காங்கே கிடைக்கும் அனுபவங்களையும், அந்தந்த ஊர்களில் உள்ள உயர்ந்த தத்துவங்களையும், மத கோட்பாடு சார்ந்த ஞான விஷயங்களையும் அறிந்து கொண்டு அவற்றை இஸ்லாமிய மரபுகளோடு இணைத்து, அவற்றை ஒரு கதையாக  உருவகப் படுத்தி  சொன்ன கருத்துக்கள் இன்றும் உலக அளவில் பேசப்படுகிறது. உலகின் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டும் காணப்படுகிறது.‌   அல்லாமா ஸஅதீ சிராஜி (ரஹ்) அவர்கள் இந்தியாவின் சிந்து சமவெளிப் பகுதியில் வருடக் கணக்கில் தங்கியிருந்தார்கள். அங்கிருந்த பல்வேறு சமூக மக்களிடம் அவர்களின் மொழியில் உறவாடி, அவர்களிடம் இருந்து ஞானங்களையும் ஞான கருத்துக்கள்  நிறைந்த நூல்களையும் சேகரித்துக் கொண்டு  தாயகம் திரும்பினார்கள்.  அவரின் இந்திய சீடர்கள் பலர் வழியனுப்பச் சென்றனர். படகு சிந்து நதியின் நடுவில் சென்று கொண்டிருந்தது. அப்போது புயல் வீசியது. படகு கவிழ்ந்து விடுமோ என்று அனைவரும் அஞ்சினர். அல்லாமா ஸஅதீ சிராஜி (ரஹ் ) அவர்கள் தாம் கற்றவையும், கொண்டு செல்லும் நூல்களும் பயனற்றதாகி விடுமோ என்று முகம் வாடினார்கள். அதனைக் கண்ட சீடர்கள் பாரம் குறைந்தால் படகு பாதுகாப்பாகச் செல்லக்கூடும் என நினைத்து அறிவுச்செல்வத்தை விட தம்முயிர் பெரிதல்ல எனவும் நினைத்து, "ஷைஹு அவர்களே! எங்களை நாங்கள் காப்பாற்றிக் கொள்கிறோம்; நாங்கள் எப்படியும் மறு கரைக்கு சென்று விடுவோம்; எங்களை விட உங்களையும் உங்களோடு இருக்கும் நூல்களையும் பாதுகாப்பது தான் எங்களின் கடமை" என சொல்லிவிட்டு அனைவரும் ஆற்றில் குதித்தனர். அல்லாமா ஸஅதீ சிராஜி (ரஹ்) அவர்கள் தம்முடைய ஞான நூல்களோடு இந்திய சீடர்களின் தியாக உணர்வுகளையும் சுமந்து கொண்டு கரைசேர்ந்தார்கள். 

  ஒவ்வொரு பள்ளிவாசலிலும் காலை, மாலை மக்தப் மதரஸா நடைபெற்று வருகிறது. அங்கு படிக்கும் மாணவர்களுக்கு வாரம் ஒரு முறை சில மணி நேரங்களை ஒதுக்கி அவர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை உண்டாக்க வேண்டும். வாசிப்பை நேசிக்கும் விதமான நூல்களை கொடுத்து வாசிக்கச் செய்ய வேண்டும்.தாய் மொழியில் சத்தமாக வாசிப்பதால் குழந்தைகளுக்குப் படிக்க வேண்டும் என்கிற உணர்வை அது  அதிகப்படுத்துகிறது என Hardward பல்கலைக்கழகத்தின் ஓர் ஆய்வு அறிக்கை கூறுகிறது.

எழுத்துக்கும் வாசிப்புக்கும் இவ்வளவு முக்கியத்துவம் இருக்கும் நிலையில் இன்று நம் சமூக மக்களின் நிலை

இந்தியாவைப் பொறுத்தவரை எவரொருவர் தனது பெயரை எழுதவும், கையெழுத்திடவும் தெரிந்திருக்கிறாரோ அவரும் கல்வியறிவு பெற்றவர் என வகைப்படுத்தப்படுகிறார். இந்த குறைந்த பட்ச கல்வியறிவைக்கூட இந்தியாவில் உள்ள மொத்த முஸ்லிம்களில்  55% அளவினர்தான் பெற்றுள்ளனர். அதிலும் முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகார், அஸ்ஸாம், ஜம்மு-காஷ்மீர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நிலைமை படு மோசமானதாக இருக்கிறது


2006-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சச்சார் குழு அறிக்கையில் முஸ்லிம்களின் கல்வி பொருளாளதார நிலை தெளிவாக படம்பிடித்து காட்டப்பட்டுள்ளது. முஸ்லிம்களில் 41% படிப்பறிவில்லாதவர்கள். 8ஆம் வகுப்புவரை படித்தவர்கள் 15%,-  +2 வரை படித்தவர்கள் 7.8%,    டிப்ளோமா வரை படித்தவர்கள்4.4%, --பட்டப்படிப்பு படித்தவர்கள் 1.7% பேர் மட்டுமே,- 38.4% பேர் வறுமையில் வாழ்கின்றனர், கிராமபுற முஸ்லிம்களில் 62% பேர் அடிப்படை வசதியில்லாத வீடுகளில் வாழ்கின்றனர், பாதுகாப்பு துறையில் 4% பேர் முஸ்லிம்கள். தமிழக உள்துறையில் உயர்பதவிகளில் 0% ஒருவர் கூட முஸ்லிம்கள் இல்லை (2006 கணக்கு படி), கீழ்மட்ட பதவியில் 2.6% பேர் உள்ளனர்.



.

No comments:

Post a Comment

இருபத்தேழாவது தராவீஹ்

 28-03-2025 RAMZAN – 27 بسم الله الرحمن الرحيم   27 வது இரவு பயான்  https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES ...