Saturday, March 22, 2025

இருபத்தி இரண்டாவது தராவீஹ்

 بسم الله الرحمن الرحيم  

 யாரையும் தாழ்வாக கருதக் கூடாது

22 வது தராவீஹ்

يأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَوْمٌ مِنْ قَوْمٍ عَسَى أَنْ يَكُونُوا خَيْرًا مِنْهُمْ وَلَا نِسَاءٌ مِنْ نِسَاءٍ عَسَى أَنْ يَكُنَّ خَيْرًا مِنْهُنَّ (11) حجرات அல்லாஹ் மனிதர்கள் அனைவரையும் ஒரே ஒரு மூலப்பொருளான களிமண்ணிலிருந்து படைத்தான். இதன் மூலம் அனைவரையும் சமமாக ஆக்கினான். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பாகுபாடு காட்ட வில்லை. 

  இஸ்லாத்தில் இனம், நிறம், மொழி, ஜாதி, குலம் போன்ற வேறுபாடுகள் கிடையாது. பிரதமரே வநதாலும் தொழுகைக்கு நின்றால் சாதாரண மனிதனின் கால் படும் இடத்தில் அவரது தலை இருக்கும். இது தான் இஸ்லாத்தின்  நிலை.

மக்காவின் வெற்றியின் போது ஒருவரை ஒருவர் தாழ்வாக கருதுவதை நபி (ஸல்)  அவர்கள் உடைத்து எறிந்தார்கள். கஃபா புனித இல்லமாக கருதப்படுகிறது. அதன் முகட்டுக்கு உயர்குலத்தைச் சேர்ந்தவர்கள் தான் ஏறிச் செல்ல அனுமதி உண்டு, தாழ்ந்தவர்களாக அவர்கள் யாரைக் கருதுகிறார்களோ அவர்களுக்கு அனுமதி இல்லை. இந்நிலையில் அபூபக்கர் (ரழி)  உமர் (ரழி), அலி (ரழி)  போன்ற பெரும் பெரும் ஸஹாபாக்கள் இருக்க நபி (ஸல்) அவர்கள் கறுப்பு நிற நீக்ரோ அடிமையான பிலால் (ரழி) அவர்களை கஃபாவின் முகட்டில் ஏறி நின்று பாங்கு செல்லச் சொன்னார்கள். இந்நிகழ்வு அரபிய வரலாற்றிலேயே திகைப்பூட்டும் சம்பவமாகும். அங்கு இஸ்லாமிய ஆட்சி மட்டும் இல்லையென்றால் பிலால் (ரழி)  அவர்களை அந்த மக்கள் கொலை செய்திருப்பார்கள். ஹாரிஸ் என்பவன் கூறினான். முஹம்மதுக்கு (ஸல்)  பாங்கு சொல்ல வைக்க இந்த கருப்புக் காக்காவைத் தவிர வேறு யாரும் கிடைக்கவில்லையா? என்றெல்லாம பேசினார்கள். 


    சுவாமி விவேகானந்தர் 1863-1902 தம் கடிதத் தொகுப்பிள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். If ever any religious approached to this equlity in any appreciable manner. It is Islam and Islam alione. இஸ்லாம் தான் மனிதர்களிடையே சமத்துவத்தை கணிசமான அளவு நிலை நாட்டியுள்ளது. மதங்களில் இஸ்லாத்தினால் மட்டுமே இந்தச் சாதனையைச் செய்ய முடிந்தது. டாக்டர் அம்பேத்கர் கூறுகையில், இறைவன் முன் மனிதர்கள் அனைவரும் சமமே என்ற அடிப்படை சிந்தாந்தத்தை நடைமுறைப் படுத்துவதில் இஸ்லாத்தைப் போன்று வேறெந்த மதமும் சரியாக கடைபிடிக்கவில்லை.

பிற மதங்களில் ஜாதி வேறுபாடு

இந்தியாவில் மேல்ஜாதி, கீழ் ஜாதி எனும் தீண்டாமை ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கீழ்ஜாதியினரை கேவலமாக நடத்தும் உரிமை மேல் ஜாதியினருக்கு நீண்ட காலமாக இருந்தது.

மனுசாஸ்த்ரா

  பிராமணன் வலிமை, துணிவு, வீரம், தூய்மை, அமைதி, ஞானம், நல்லறிவு, கடவுள் நம்பிக்கை போன்றவைகளுக்கு உரித்தாவன் என்றும் சூத்திரன் என்றால் கழிவு அள்ளுவது, பெருக்குவது போற வேலைகள் செய்ய வேண்டும் என்றும் அவரவர் பிறப்புக்குத் தக்க வேலைகளையும் பிரித்துக் கொடுத்துள்ளதாக சீதை சொல்கிறது. திறமைக்கு, நேர்மைக்கு இங்கே எந்த வேலையும் இல்லை, எல்லாம் பிறப்பினால் முடிவு செய்யப் படுகிறது. சூத்திரனின் கடமை, அந்தக் கேடு கெட்ட கடமையைச் செய்யும் போது கூட கடமையைச் செய்ய வேண்டுமே தவிர அதற்குரிய பயனை எதிர் பார்க்கக் கூடாது என்கிறது சீதை.

 இந்த நூலைத்தான் இந்தியாவின் தேசிய நூலாக ஆக்கவேண்டும் என்று பா.ஜ.க துடிக்கிறது. வேதம் ஓதுவதை சூத்திரன் காதால் கேட்டால் ஈயத்தைக் காய்ச்சி அவனுடைய காதுகளில் ஊற்ற வேண்டும். அவன் வேதத்தை உச்சரித்தால் அவனது நாக்கை அறுத்துத் துண்டாக்கிட வேண்டும். வேத நாதங்களை அவன் உள்ளதில் தேக்கி வைத்தால் அவனது உடலை கண்ட துண்டமாக ஆக்கிட வேண்டும். (மனுவின் விதி-167-272-ஸ்ரீ)

கீழ் ஜாதியினர் மேல் ஜாதியினரின் வீட்டிற்கு செல்லக் கூடாது. அவர்களின் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது, அவர்கள் குளிக்கும் கிணற்றில் குளிக்கக் கூடாது, அவர்கள் செல்லும் கோயில்களுக்கு செல்லக் கூடாது, அவ்வளவு ஏன் அவர்கள் முன் தலை நிமிர்ந்து கூட நடக்கக் கூடாது. என்றெல்லாம் அவர்களின் சாஸ்திரங்கள் கூறுகின்றன.ஆனால் இஸ்லாம் இதை விட்டும் மாறுபட்ட ஒன்று. 

 وروي لما استقر عمر بن العاص رض في مصر تعدي ابنه علي احد الاقباط من اهالي مصر وضربه فذهب القبطي المضروب الي الخليفة عمر بن الخطاب رضي الله عنه في المدينة واستعاذ به فبعث الخليفة الي عمرو بن العاص رض فاستقدمه وابنه فلما جاء أعطي الخليفة الي القبطي سوطا وامره أن يضرب ابن عمرو فضربه وأراد أن يضرب اباه عمرو فقال عمرو رض انما ابني الذي ضربك؟ فقال له الخليفة "ياعمرو متي استعبدتم الناس)2وقد ولدتهم أمهاتهم أحرارا؟  (دروس التاريخ الاسلامي)

உமர் (ரழி) ஆட்சியில் எகிப்தின் ஆளுநராக இருந்த அம்ருப்னு ஆஸ் (ரழி)  அவர்களின் மகன் எகிப்தைச் சார்ந்த மாற்று மதத்தவரை அடித்து விட்டார் அடிவாங்கியவர் அம்ருப்னுஆஸ் (ரழி)அவர்களிடம் செல்லாமல் நேரடியாக உமர் (ரழி) அவர்களிடம் வந்து புகார் அளித்தார். உடனே உமர் (ரழி)  அவர்கள் அந்த மகனையும் அழைத்து அம்ரு (ரழி)  அவர்களையும் வரச் சொன்னார்கள். வந்தவுடன் உமர் (ரழி)அவர்கள் அடிவாங்கிய எகிப்தியரிடம் சாட்டையைத் தந்து நீ திருப்பி அடி என்று கூறியவுடன் அவர் அடித்தார், பிறகு ஆளுநரைக் காட்டி அவரையும் அடி என்று உமர் (ரழி) அவர்கள் கூறிய போது, ஆளுநரையும் அடிக்க அவர் முனைந்த போது ஆளுநர் என் மகன் தானே உன்னை அடித்தான். நான் உன்னை அடிக்க வில்லையே என்று அவர் கூற அவர் சாட்டையைக் கீழே  போட்டு விட்டார்.  பிறகு உமர்(ரழி) அவர்கள் அந்த மகனை நோக்கி இவர்களை இவர்களின் தாய்மார்கள் சுதந்திரமானவர்களாகப் பெற்றெடுத்திருக்க நீங்கள் எப்படி இவர்களை அடிமை போல் அடிக்கலாம் என எச்சரித்தார்கள். 

இன,நிற வேறுபாடு

ஐரோப்பிய மக்கள் வெள்ளை நிறம் உடையவர்கள் ஆஃப்ரிக்க மக்கள் கறுப்பு நிறம் கொண்டவர்கள். இதன் அடிப்படையில் வெள்ளை நிறமுடைய நாங்கள் தாம் பிறவிலேயே உயர்ந்தவர்கள். கருப்பர்கள் பிறவிலேயே தாழ்ந்தவர்கள் ((Natural slaves) என்று ஐரோப்பியர்கள் கருதினார். கறுப்பர்களை அடிமையாக்கி, அவர்களிடமிருந்து எல்லா விதமான வேலைகளும் வாங்குவது வெள்ளையர்களுக்கான நியாயமான உரிமை என ஐரோப்பியர் கருதினர். அரேபியர்களிடம் இது போன்ற பாகுபாடுகள் இருந்தன. யாரையெல்லாம் அரபியர்கள் இழிவாக கருதினார்களோ அந்த அனைவரின் அந்தஸ்தையும் உயர்த்தியவர்கள் நபி (ஸல்) அவர்கள்தான்.

 ஜைனப் பின்து ஜஹ்ஷ் (ரழி) என்ற தனது மாமி மகளான குரைஷி உயர் குலத்தைச் சேர்ந்த பெண்ணை அபூசீனியா அடிமையான ஜைதுப்து ஹாரிஸ் (ரழி) அவர்களுக்கு திருமணம் முடித்தார்கள். அக்காலத்தில் இது புதுமையான ஆச்சிரியமான ஒரு நிகழ்ச்சியாகும். 

يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ (13)

  மனிதர்களே நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், பெண்ணிலிருந்து படைத்தோம். இன்னும் ஒருவருக்கொருவர் நீங்கள் அறிமுகமாகிக் கொள்வதற்காக உங்களை கிளைகளாக, கோத்திரங்களாக ஆக்கினோம். நிச்சயமாக அல்லாஹ்விடம் உங்களில் மிக கண்ணிய மிக்கவர் உங்களில் மிகவும் பயபக்தியுடையவர் தான் நிச்சயமாக அல்லாஹ் யாவையும் நன்கறிந்தவன். (ஹுஜராத்-13) 

நபியும் கிராமவாசியும் 

ஜாஹிர் பின் ஹராம் என்ற ஸஹாபி கிராம வாசியாகவும், அறுவறுப்பான தோற்றமுடையவராகவும் இருந்தார். 

இவர் ஊரில் இருந்து வரும் போது நபி (ஸல்)  அவர்களுக்கு அன்பளிப்பு வழங்குவார். பதிலுக்கு நபி(ஸல்) அவர்களும் அன்பளிப்பு வழங்குவார்கள். ஒரு நாள் அவர் கடைத்தெருவில் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் போது அவர் பார்க்காத வண்ணம் பின்னே வந்து நபி (ஸல்) அவர்கள் அவரை கட்டியணைத்தார்கள். அந்த ஸஹாபி யார் நீங்கள் என்னை விட்டு விடுங்கள் என்று திரும்பினார்.அப்போது தன்னை அணைத்திருப்பது நாயமகம் தான் என்று அறிந்த பின் தன் முதுகை நபியின் நெஞ்சோடு நெருக்கமாக ஆக்கினார். அப்போது நபி (ஸல்)  அவர்கள் கேலியாக இந்த அடிமையை யார் வாங்குவார் என்றார்கள். அதற்கவர் நான் செல்லாக் காசு, மதிப்பற்றவன் யா ரஸுலல்லாஹ் என்று கூறினார்கள். நபி (ஸல்)   அவர்கள் நீர் அல்லாஹ்விடம் மதிப்பற்றவன் கிடையாது என்று அந்த நபரின் அந்தஸ்தை உயர்த்தியவர்கள் நபி (ஸல்)  அவர்கள் தான்.

அரசரும் அடிமையும்

அரசருக்கும், அடிமைக்கும் மத்தியிலேயே பாகுபாடு இல்லை என்று இருக்குமாயின் அது இஸ்லாமிய ஆட்சியாகத் தான் இருக்கும். பாலஸ்தீன நாடு உமர் (ரழி) அவர்களின் காலத்தில் வெற்றி கொள்ளப்பட்டது. அந்த பாலஸ்தீனியர்களுடன் உடன்டிக்கை செய்துகொள்ள கலீஃபா உமர் (ரழி) அவர்கள் மதீனா நகரை விட்டும் புறப்பட்டார்கள். அப்போது மிக எளிய உடைகளையே அணிந்திருந்தார்கள். அவர்களுடன் ஒரு ஒட்டகமும், ஒரு பணியாளரும் இருந்தனர். உமர் (ரழி) அவர்கள் தமது பணியாளரிடம் கூறினார்கள் நான் மட்டும் ஒட்டகத்தின் மீது அமர்ந்து கொண்டு நீ நடந்து வந்தால் நான் உன் மீது கொடுமை புரிந்தவனாவேன். நீ மட்டும் ஒட்டகத்தில் அமர்ந்து நான் நடந்து வந்தால் நீ என் மீது கொடுமை புரிந்தவனாகி விடுவாய். நாம் இருவரும் ஒட்டகத்தின் மீது அமர்ந்து பயணம் செய்தால் இந்த வாயில்லா பிராணியின் மீது நாம் இருவரும் கொடுமை புரிந்தவர்களாகுவோம்.எனவே நாம் நேர அட்டவணை போட்டு பயணத்தைத் தொடர்வோம். நமக்கு மத்தியில் பாகுபாடு தேவையில்லை என்றார்கள். அதன்படி கலீஃபா சிறிது தூரம் வரை ஒட்டகத்தில் அமர்ந்து வந்தார்கள். பணியாளர் நடந்து வந்தார். அடுத்து பணியாளர் அமர்ந்து வந்தார். உமர் (ரழி) அவர்கள் நடந்து வந்தார்கள். பிறகு இருவரும் நடந்து வந்தனர். ஒட்டகத்துக்கு ஓய்வு கொடுத்தனர். இவ்வாறு மாறி மாறி பயணித்து வந்தனர். இவர்கள் பாலஸ்தீன் நாட்டில் நுழையும் போது பணியாளர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருந்த காட்சியை அனைவரும் பார்த்தனர். கலீஃபா இங்கே நான் அரசன் நீ அடிமை என்று எந்த பாகுபாட்டையும் காட்டவில்லை. ஆக எந்த மதமும் எந்த சமுதாயமும் தராத இந்த சமத்துவத்தை நிலை நாட்டுவதில் இஸ்லாம் உச்சத்தைத் தொட்டது. உலகிலேயே மதச்சார்பற்ற அரசை முதலில் நிறுவியவர்கள் முஸ்லிம்கள் தான். முகலாயர் காலத்தில் மக்கள் வாழ்வு வளம் பெற்று விளங்கியது. பல சிற்றரசுகளாக பிரிந்து கிடந்த நாட்டை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். நாடு முழுவதும் ஒரே ஒரு சட்டம் அமலுக்கு வந்தது. ஜாதி வெறிக்கு ஒரு நீதி கிடைத்தது. 

இஸ்லாத்தில் ஏற்றத்தாழ்வு கிடையாது என்பதற்கு தொழுகையே மாபெரும் சாட்சியாகும். இது வெறும் வணக்கமாக மட்டுமல்ல. மாறாக சமத்துவத்தை எடுத்துரைக்கும் ஒரு வழியாக இருக்கிறது. இமாம் முன்னால் நின்று தொழுகை நடத்துகிறார் என்றால் அது அவருக்கு இருக்கிற தனிப்பட்ட முன்னுரிமையினால் அல்ல. ஒரு சமுதாயம் ஒரு தலைமையின் கீழ் சீராக செயல்பட வேண்டும் என்பதை பழக்கப்படுத்துவதற்குத் தான். விபரம் தெரிந்த எவரும் அப்பொறுப்பை ஏற்கலாம். சில மதங்களில் இருப்பது போல குறிப்பிட்ட வகுப்பினர் மட்டும் தான் மதகுருவாக அர்ச்சகர்களாக ஆக முடியும் என்பதைப் போன்ற பிரிவினை இஸ்லாத்தில் இல்லை. பயிற்சி பெற்ற இந்துக்கள் அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என தமிழக அரசு கொண்டு வந்த ஆணையை நிராகரித்தது உச்சநீதி மன்றம். 

இஸ்லாம் எந்த நிலையிலும் யாரையும் தாழ்வாக கருதுவதை எப்போதும் அனுமதிக்கவில்லை. ஆனால் முஸ்லிம்களிலே சிலர் நீ தமிழ் முஸ்லிம் நான் உர்து முஸ்லிம் என்று பாகுபாடு காட்டி மணந்து கொள்ள மறுக்கின்றனர். இது போன்ற எண்ணங்களை முஸ்லிம்கள் உடைத்து இஸ்லாம் மார்க்கம் விரும்புகிற சமத்துவத்தை கடைபிடித்து யாரையும் தாழ்வாக கருதாமல் வாழ வேண்டும்

No comments:

Post a Comment

இருபத்தேழாவது தராவீஹ்

 28-03-2025 RAMZAN – 27 بسم الله الرحمن الرحيم   27 வது இரவு பயான்  https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES ...